ஸ்ரீய: பதியான வைகுண்ட வாஸுதேவன் குணசீல மஹரிஷியின் தவத்திற்காக ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாக காட்சியளித்த அற்புத ஷேத்திரம் குணசீலம். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சலையில் திருச்சியிலிருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நதியின் அழகிய வடகரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் எம்பெருமாள், ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் நின்ற திருகோலத்தில் காட்சியளிக்கிறார். சங்கம், சக்கரம், வரதஹஸ்தம், கடிஹஸ்தத்துடன் திருமார்பில் இலக்குமியைத் தாங்கி ஸேவை சாதிக்கும் எம்பெருமான் வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கிறார். இச்செங்கோலினாலேயே செய்வினை மற்றும் பில்லி சூனியக் கோளாறுகளை எம்பெருமான் நிவர்த்தி செய்வதாக ஐதிகம். ஆகவே மனநல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் செய்வினை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி விரத முறைகளை மேற்கொண்டு காவேரி நதியில் நீராடி எம்பெருமானை வழிப்பட்டால் அவ்வினைகள் யாவும் நீங்கி சுகம் பெருகின்றனர். இதுவே இத்தளத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் திருப்பதி எம்பெருமானே இங்கு குணசீல மஹரிஷிக்கு காட்சியளித்தால் திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்து இயலாதோறும் அந்த பிராத்தனைகளை இவ்வெம் பெருமானிடத்தில் செலுத்தி நிறைவு பெருகின்றனர். இது கர்ண பரம்பரையாக நடைப்பெற்று வருகிறது. ஆகவே தென் திருப்பதி எனவும் இத்திருத்தலம் போற்றப்படுகிறது. |
|||