ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கோயில் 

குணசீல மஹாத்மியம்
தால்பிய மஹரிஷியின் சிஷ்யரான குணசீலர் நீலிவனம் எனப்படும் (தற்போது திருப்பைஞ்றீலி என அழைக்கப்படுகிறது) வனத்தில் அமைந்துள்ள ஆசிரமத்தில் குருநாதருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு வேதங்களையும், புராணங்களையும், நன்கு கற்றறிந்து வந்தார். ஒரு சமயம் தால்பியார் தமது சிஷ்யர்களுடன் இமயமலைக்குச் சென்று வியாசரை ஸேவித்து விட்டு பின் கங்கை மற்றும் புனித நதிகளில் நீராடி தமது ஆசிரமம் திரும்பும்போது திருவேங்கடமளைக்குச் சென்று அங்கு மிகுந்த ஆச்சர்யத்துடன் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையானை ஸேவித்து நின்றார். குணசீல மஹரிஷியானவர் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் தமது ஆசிரமத்திற்கு எழுந்தருள வேண்டினார். ஆனால் திருவேங்கடமுடையானோ தம் இந்த கல்பம் முடியும் வரையில் திருமலையில் இருந்து அருள சங்கல்பம் கொண்டுள்ளதால் நீர் உமது ஆசிரமம் சென்று தவம் இயற்றினால் உமது எண்ணம் நிறைவேறும் இதற்கான உபாயத்தை உனது குருநாதரிடம் கேட்டுத் தெரிந்துகொள் என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
எம்பெருமானின் உத்தரவை தனது குருநாதரிடம் குணசீலர் தெருவிக்க தால்பியரும் அதற்கான உபாயத்தை தெரிவித்தார். புராணத்தில் நடைபெறப் போவது யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விதமே உனது தவத்தின் பயனாய் ஸ்ரீ வைகுண்டவாஸுதேவன் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள உமது ஆசிரமத்திற்கு ஸ்ரீதேவியுடன் கூட எழுந்தருளப்போகிறார். ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் இந்த கல்பம் முடியும் வரை திவ்யமங்கள விக்ரஹ ஸ்வருபனாய் எழுந்தளியிருந்து. பக்தா பீஷ்டத்தை பூர்த்தி செய்து கொண்டு நித்யவாஸம் செய்யப்போகிறார். ஆகவே நீர் உமது ஆசிரமம் சென்று தவம் இயற்றுவாயாக என ஆசி வழங்கினார்.
குணசீல மஹரிசியானவர் மிகுந்த சந்தோஷத்துடன் தமது ஆசை நிறைவேறப் போவதான குதூகலத்துடன் குருநாதர் தால்பியரிடம் ஆசிபெற்று காவிரியின் கரையில் அமைந்துள்ள தமது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கு காவேரி நதியில் நீராடி ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவனை மனதில் தியானம் செய்து தவம் இயற்றலானர். கோடைகாலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், குளிர்காலத்தில் ஈர வஸ்திரத்துடனும், மழைக் காலத்தில் ஜலத்தில் நின்றுகொண்டும் கடுமையான தவம் மேற்கொண்டார். இவரது தவத்தை பார்த்து தேவர்கள் பயமடைன்தனர். இந்திரன் தமது பதவிக்கு ஆபத்து வருமோ என்று எண்ணி இடி, மழை, காற்று, மின்னல், இவைகளாலும் வேறு பல வழிகளிலும் குனசீலரின் தவத்தை கலைக்க முற்பட்டான். ஆனால் இவைகளினால் குனசீலரின் தவத்தை கலைக்க இயலவில்லை. இந்திரன் முதலான தேவர்கள் குனசீலரின் தவம் குறித்து அறிய பிரம்மாவை வணங்கி நின்றனர். பிரம்மா தமது ஞான திருஷ்டியால் அறிந்து குணசீலர் வைகுண்ட வாஸுதேவனைக் குறித்து தவம் இயற்றுகிறார். தமது ஆசிரமத்திற்கு எழுந்தருளி நித்ய வாஸம் செய்ய வேண்டும் என்ற பிராத்தனையுடன் மிகவும் குதூகலத்துடன் தவம் இயற்றுகிறார். ஆதலால் உங்களால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை நீங்கள் பயப்பட வேண்டாம் என பிரம்மா உரைத்தார். இதனைக் கேட்டு இந்திராதி தேவர்கள் பிரம்மாவை வணங்கி விடை பெற்றனர்.
பிரம்மண்டங்களைத் தாண்டி விரஜா நதியின் அண்மையில் கோடி சூரிய பிரகாசத்துடன் கூடிய விமானத்தளங்களுடனும், ரத்தினங்களால் இழைக்கப்பெற்ற தூன்களுடனும் விளங்கும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸனகாதி முனிவர்களாலும், நாரதரும் முனிவர்களும் போற்ற ஆதிசேஷன் மேல் ஸ்ரீதேவி, பூதேவிஸமேதராய் வீற்றிருக்கும் எம்பெருமான் ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவன் தன்னையே எண்ணித் தவம் புரிந்து வரும் குணசீல மஹரிஷிக்கு காட்சியளிக்க எண்ணி ஸ்ரீதேவியுடன் கூட வேதரரூபியான கருடன் மேல் ஆரோஹணிந்து வைகுண்டத்தை விடுத்து விரஜாநிதியைத் தாண்டி ப்ரம்மாண்டங்களை அடுத்து மஹாமேருபர்வத்தையும் இமயமலை, விந்தியமலை, முதலிய பர்வந்தங்களை பார்த்துக்கொண்டு காவேரி நதியின் அழகிய கரையில் அமைந்துள்ள குனசீலரது ஆசிரமத்திற்கு எழுந்தருனினார்.

எம்பெருமானின் வருகையை முன்னமே அறிந்த பிரம்மா சரஸ்வதியுடன் கூட ஹம்ஸாரூடராகவும், சிவன் பார்வதியுடன் கூட ரிஷபாரூடராகவும் இந்திராதேவி தேவர்கள், ஸனகாதி முனிவர்கள், நாரதர் தும்புரூ, கந்தர்வர்கள், கின்னர்கள் கிம்புருஷர்கள், யக்ஷர்கள், ஸாக்கியர்கள், சாரணர்கள் முதலியவர்களும் தல்பியார் தமது சிஷ்யர்களுடன் குணசீலராசிரமத்தில் குழுமியிருந்தனர்.
ஸ்ரீதேவியுடன் கூட வைகுண்ட வாஸுதேவன் தமது ஆசிரமத்திற்கு எழுந்தருளியது அறிந்த குணசீளரும் தவநிலையிலிருந்து மீண்டு கோடி சூரிய பிரகாசத்துடன் மஹாமேருவின் மேல் ஒரு காளமேகம்போல் கருடாரூடராக காட்சியளிக்கும் ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவனை கண்ணாரக்கண்டு அவரது திருப்பாதக்கமங்களில் நெடுஞ்சாணாய் கிடந்து வணங்கினார்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்கபெறாத அந்த அற்புதக் காட்சியைக் கண்டு அமுதம் பருகியவராய் குணசீலர் மெய் சிலிர்த்து நின்றார். பாபங்களைப் போக்கி மோட்சத்தை அளிக்கும் கமல போர்பாதங்களையும், பதுமரேகை அங்குசரேகை, வஞ்சிர ரேகைகளால் சிவந்திருக்கப்பட்ட திருவடி இணையினையும், தண்டை, கொலுசு போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கணுக்கால்களையும், பீதாம்பரம் தவழும் தொடையினையும், முத்து பவளம் வைரங்கள் இழைக்கப்பட்ட மணிமேகலை தவழும் இடையினையும், அண்டசராசரங்களையும் அடக்கி வைத்திருக்கும் திருவயிறும், கங்க்காவர்த்தனம் சுழித்தார் போன்ற நாபிக்கமலமும், ஸ்ரீ வத்ஸமருவுருடன் கூடிய அழகிய திருமார்பையும், பிரளம்பயஞ்யோபவீதம் தவழும் தோளும் சங்கு போன்ற கழுத்தும், அபயகரமும், மலர்ந்த தாமரை போன்ற முகத்தில், கொவ்வைக்கனி போலும், பவளம் போலும் சிவந்த வாய்த்தாமரையும், எள்ளின் புஷ்பத்தைப் போன்ற நாசியும், தாமரை இதழ்போன்ற கண்களும், அவற்றின் நடுவே மதுபானம் குடித்த வண்டுகள் போன்ற விழிகளும், கோதண்டத்திற்கு சமானமாய் திகழும் புருவங்களும், செவிகளில் குண்டலமும் நவரத்தினங்கள் இழைக்கப் பெற்ற கிரீடமும், கௌஸ்துபம், வனமாலை, தோள்வளை, ஹாரம் ஆகிய ஆபரணங்களை அணிந்தவராய் சங்கு, சக்கரம், வில், வாழ், கதை ஆகிய பஞ்சாயுதங்களை ஏந்தியவராய், சுகந்த புஷ்ப பரிமள மாலைகளை தரித்தவராய், மூவுலகமும் பிரமிக்கத்தக்க மந்தகாசச் சிரிப்புடன் காட்சிதரும் வைகுண்ட வஷுதேவனை பாதாதிகேசம் ஸேவித்து குணசீலர் மெய்மறந்து நின்றார். அவரைப் பார்த்து எம்பெருமான் நீர் விரும்பும் வரத்தைக் கேள் என திருவாய் மலர்ந்தார்.
குணசீலமஹரிஷியும், "எம்பெருமானே தமது ஸேவையைத் தவிர கேட்பதற்கு வேறு என்ன இருக்கிறது. இருப்பினும் பூவுலகோர் பயனுறும் வகையில் தாங்கள் கல்பம் முடியும்வரை, இந்த ஆசிரமத்தில் நித்ய வாஸம் செய்ய வேண்டும். தங்களை வந்து அண்டி வணங்கும் பக்தர்கள் வேண்டும். வரங்களை தாங்கள் அருள்புரிய வேண்டும்" என வேண்டினார். அவ்வாறே ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவனும் இந்த கலியுகம் முடியும் வரையில் குணசீல மஹரிஷியின் பிரார்த்தனைப்படி நித்ய வாஸம் செய்ய எண்ணம் கொண்டு கலெள வேங்கடேநாயக; என்றபடி கலியுக தெய்வமாய்த் திகழ ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாக திவ்யமங்கள விக்ரஹஸ்வரூபனாய் சங்கு சக்கரம் வரதஹஸ்தம் கடிஹஸ்தம் உடையவராய், திருமார்பில் இலக்குமியைத் தாங்கி நின்ற திருகோலத்தில் காட்சியளித்தார்.
எம்பெருமானுடைய ஆவிர்பாவ காலம் க்ருதயுகம், புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம் சனிக்கிழமை மத்யான வேளை தனுர் லக்னம் கூடிய சுபதினத்தில் குணசீலமஹரிஷிக்கு ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவன் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
திவ்யமங்கள விக்ரஹ ஸ்வரூபனாய் எழுந்தருளிய ஸ்ரீ பிரஸன்ன வெங்கடேசப் பெருமானை குணசீல மஹரிஷி எம்பெருமானுக்கு மிகவும் உகப்பான ஸ்ரீ வைகாநஸதிவ்ய பகவத் சாஸ்திர முறைப்படி ஆராதனம் செய்யலானார். ஸ்ரீ வைகனஸ பகவத் சாஸ்திரமானது ஸ்ரீ விகநஸர் என்ற முனிவரால் உபதேசிக்கப்பட்டது. அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு எவ்வாறு உபசாரங்கள் செய்வது அவருக்கான கோயிலை நிர்மாணம் செய்வது, உற்சவங்களை நடத்துவது முதலிய முறைகளை இந்த பகவத் சாஸ்திரமானது விரிவாக விளக்குறது.
ஸ்ரீ விகநஸாசார்ய அவதாரம்
அண்டசராசரங்கள் படைத்த எம்பெருமான் பிரம்மாவின் மூலம் உலகை சிருஷ்டித்தார். எம்பெருமானின் கருணை இல்லாதபடியால் உயிரினங்கள் யாவும் எந்த தேஜஸும் இல்லாமலும் பயினின்றியும் வாழ்வதைக் கண்ட எம்பெருமான் தமது க்ருபை அனைத்திற்கும் கிடைக்க எண்ணி தாம் அர்ச்சாவதாரமாய் பூவுலகில் எழுந்தருளப் போவதாகவும் அவ்வாறாக அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியுள்ள விக்ரஹங்களுக்கு உபசாரங்களைச் செய்து தனது அருளைப் பெறும் வழிகளை உபதேசிக்கும் ஒரு முனிச்ரேஷ்டரை படைக்க பிரம்மாவுக்கு ஆணை பிறப்பித்தார். ஆனால் பிரம்மாவோ சாதாரண மனுஷ்ய உயிர்களை மட்டுமே தம்மால் படைக்க இயலும் என்று தங்களை ஆராதிக்கும் முனிச்ரேஷ்டரை உருவாக்க இயலாது அதற்கு தாங்களே உபாயம் அளிக்க வேண்டும் என்று ப்ரம்மா எம்பெருமானிடம் முறையிட்டார்.
இது கேட்ட எம்பெருமான் தமது இதயத்திலிருந்து வேதாந்தத்தில் தோய்ந்தவராகவும், விஷ்ணு பக்தி மிகுந்தவராகவும் சிகை, யஞ்யோபவீதம் உடையவராகவும் திரிதண்டம் எந்தியவராகவும், கிரீடம், ஹாரம், தோள்வளை முதலிய ஆபரணங்களை அணிந்தவராகவும், சங்கு சக்கரம் கமண்டலத்துடன் ஒரு பிரம்ம ரிஷியாக காட்சி தரும் விக நஸர் என்ற மாமுனியை தோற்றுவித்தார். ஸ்ரீ விகநஸருக்கு பிரம்மாவுக்கும் ஒரே முகூர்தத்தில் உபநயனம் செய்து வைத்து ஒன்றரை கோடி க்ரந்தங்களை எம்பெருமானே உபதேசித்தார். ஸ்ரீ விகநஸர் அத்ரி, ப்ருகு பரத்வாஜார், கௌதமர் முதலிய முனிவர்களைப் படைத்தார். பிரம்மா, ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர் முதலியவர்களைப் படைத்தார்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீ விகநஸரையே ஆச்சார்யனாகச் கொண்டு வழிபட வேண்டும் என எம்பெருமான் ஆணையிட்டார். அதன்படி விகநஸர் எம்பெருமான் உபதேசித்த ஒன்றரை கோடி க்ரந்தங்களையும் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
எம்பெருமானின் நியமனப்படி வைகுண்டத்தை விடுத்து பூவுலகில் எழுந்தருளி நைமிசாரண்யத்தில் நர நாராயணரை ஸ்ரீ விகநஸர் ஆராதித்து வந்தார். அத்ரி, ப்ருகு, மரீசி காச்யபர் ஆகிய நால்வரும் ஸ்ரீ விகநஸாசார்யர் அருளிய ஸ்ரீ வைகாநஸதிவ்ய பகவத் சாஸ்திர முறையினை பூவுலகோர் அறியச் செய்தனர்.
இந்த ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்தர முறையினை பின்பற்றுபவர்கள் வைகாநஸர்கள் என்றும் அவர்களுக்கு பதினெட்டு சமஸ்காரங்களையும் ஸ்ரீ விகநஸாசார்யர் விதித்துள்ளனர். இந்த பதினெட்டு சமஸ்காரங்கலையும் வாழ்க்கையில்கடைப்பிடித்து சதாசர்வ காலமும் எம்பெருமானின் திருவாராதனத்திலேயே ஈடுபடுவதால் ஸ்ரீ வைகாநஸன் தாமரை இலை நீர்போல் உலக இன்ப துன்பங்களிலிருந்தும் விலகி கடைசியில் ஸ்ரீ வைகுண்டத்திலே எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும் நித்யசூரிகலாய் திகழ்கிறான் என மரீசி மரிஷி உரைக்கிறார்.
வேதங்கள் நான்காகப் பிரிவதற்கு முன்னமே தோன்றியதாலும் எம்பெருமானாலேயே ஸ்ரீ விகநஸருக்கு உபதேசிக்கப்பட்டதாலும் இந்த ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரமனது எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய மிகவும் உகப்பானதாகும்.
ஸ்ரீ வைகாநஸ ரிஷியான குணசீல மஹரிஷியும் தனது குருநாதர் தால்பியரிடம் உபதேசம் பெற்ற ஸ்ரீ வைகாநஸ திவ்ய ப்கவத்சாஸ்திர முறைப்படியே எம்பெருமானுக்கு க்ருத, த்ரேதார, த்வாபரயுகம் கடைசிவரை குறைவர திருவாராதனம் செய்து வந்தார். த்வாபரயுகம் கடைசியில் தனது குருநாதர் தால்பியரிடமிருந்து நைமிசாரண்யம் செல்ல அழைப்பு வந்தது. தமக்குப் பிரியமான ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமானை விட்டு பிரியவும் மனமில்லாமல் குருநாதரிடம் அழைப்பையும் நிராகரிக்க முடியாமல் குணசீலர் எம்பெருமானையே சரணடைந்து வேண்டினார்.
இந்த கல்பம் நிறைவுறும் வரை இத்தலத்தில் நித்யவாஸம் செய்வதாக சங்கல்பம் கொண்டுள்ள எம்பெருமான் குணசீலரின் பிரார்த்தனையை ஏற்று அவரை குருநாதருடன் செல்ல உத்தரவளித்தார். எம்பெருமானின் உத்தரவை ஏற்று குணசீலரும் தமது சிஷ்யன் ஒருவனை திருவாரதனத்திற்கு நியமித்து விட்டு எம்பெருமானை வணங்கி குருநாதருடன் நைமிசாரண்யம் சென்றார்.
குணசீல மஹரிஷியின் சிஷ்யரான சிறுவன் அவரது ஆணைப்படி எம்பெருமானுக்கு குறைவர திருவாராதனம் செய்து வந்தான். மிக அண்மையில் அமைந்துள்ள காவேரி நதிகள் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும் வனவிலங்குகளின் தொல்லையாலும் சிறுவன் ஆராதனம் செய்வதை விட்டுவிட்டு சென்று விடுகிறான். கலியுக மக்களின் நன்மைக்காக அர்ச்சாரூபமாக அவதரித்த எம்பெருமான் தன்னை முழுவதும் புற்றினால் மறைத்துக் கொள்கிறார்.
காலங்கள் பல கடக்கின்றன. எம்பெருமான் எழுந்தருளியுள்ள புற்று அமைந்துள்ள இடம் பலப்பல மாற்றங்களுக்குள்ளாகி அடர்ந்த புல்வெளியாக மாறியது. நிசுளாபுரியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் ஞானவர்மன் எனும் சோழ அரசன். (தற்போது திருச்சி மாநகரில் உள்ள உறையூர் என்னும் நகரமே அக்காலத்தில் நிசுலாபுரி என அழைக்கப்பட்டது) அவ்வரசனின் கோசாலையானது எம்பெருமான் எழுந்தருளியுள்ள புற்றின் சமீபத்தில் அமைந்துள்ள கிராமமான பத்ரசக்ரம் எனும் இடத்தில் அமைந்திருந்தது (பத்ரசக்ரம் எனும் கிராமம் தற்போது குனசீலத்திற்கு மிக அருகாமையில் உள்ள கல்லூர் எனும் கிராமமாகும்).
பத்ரசக்ரத்தில் வசிக்கும் இடையர்கள் எம்பெருமான் எழுந்தருளி உள்ள புற்றின் அருகாமையில் உள்ள புல்வெளியில் மாடுகளை மேய்த்து அங்கேயே பால்கறந்து குடங்களில் நிரப்பி சிறிது இளைப்பாறிவிட்டு அரசனது அரண்மனைக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டனர்.
அவ்வபோது ஒரு சமயம் பால் நிரம்பிய குடங்களில் உள்ள பால் மட்டும் மாயமாய் மறைந்து வெறும் குடங்களாயின. அரசனுக்கு யாது கூருவது என இடையர்கள் திகைத்திருக்க அவர்களில் வயது முதிர்ந்த இடையர் ஒருவருக்கு அருள் ஏற்பட்டு " நான் தான் பிரஸன்ன வேங்கடேசன் இந்த புற்றில் வெகுகாலம் வசித்து வருகிறேன். இதனை உமது அரசனிடம் தெரியப்படுத்துங்கள்" என உறைத்து நின்றார். அதனைக் கேட்ட இடையர்கள் அரண்மனைக்குச் சென்று அரசனிடம் நடந்தவைகளை தெரிவித்தார்கள்.
தமது தேசத்திற்கு எம்பெருமானே எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிந்த அரசனும் மிகுந்த சந்தோஷத்துடன் உடன் பத்ரசக்ரம் செல்ல அனைவருக்கும் ஆணையிட்டான். அரசு தமது மந்திரி பரிவாரங்களுடனும் சதுரங்க சேனையுடனும் பத்ரசக்ரபட்டின பிரயாணத்தை தொடங்கினான். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் புற்றின் சமீபம் வருகையில் ஒரு பிராமணர் எதிற்பட்டதைக் கண்டு அவரை வணங்கி நின்றான். அவர் அரசனப்பார்த்து இந்த புற்றை முழுவதும் பால்கொண்டு கரைப்பாயாக உனக்கு ஷேமம் உண்டாகும் என ஆக்ஞாபித்து மறைந்தார்.
இதனை எம்பெருமானே தமக்கு உணர்த்தியதாக மகிழ்ந்து ஆறாயிரம் குடங்கள் பால் கொண்டு வர அரசன் ஆணையிட்டான். இடையர்கள் ஆயிரமாயிரம் குடங்களில் பாலைக் கறந்து தலையில் சுமந்து வந்தனர். ஞானவர்மனும் அந்த பாலால் புற்று முழுவதையும் கரைத்தான். அந்தப்புற்றின் நடுவில் திவ்யமங்கள விக்ரஹஸ்வரூபனாய் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமான் எழுந்தருளியிருப்பது கண்டு ஆனந்தம் கொண்டு அவருடைய திருப்பாத கமலங்களில் நெடுஞ்சாணாய் கிடந்தது வணங்கினான். ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமான் ஞானவர்ம அரசனுக்கு பிரத்யஷயமாக காட்சியளித்தார்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்கப்பெறாத அந்த அற்புத ஸேவையைக்கண்டு ஞானவர்மன் மெய்சிலிர்த்து நின்றான். வாஸுதேவா, ப்ரத்யும்னா, சங்கர்ஷணா, அநிருத்தா என எம்பெருமானின் நாமங்களைச் சொல்லி போற்றினான்.
"அரசனே உமது பக்தியைக் கண்டு மெச்சுகிறேன் குணசீல மஹரிஷியின் தவத்தினை ஏற்று அவரது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, இந்த கல்பம் முடியும் வரை இத்திருத்தலத்தில் திவ்யமங்கள விக்ரஹராய் நித்யவாசம் செய்ய சங்கல்பம் கொண்டுள்ளேன். ஆகவே இவ்விடத்தில் எனக்கு ஒரு ஆலையம் அமைப்பாயாக குணசீல மஹரிஷியால் எமக்கு செய்விக்கப்பட்ட மிகசிறந்த ஆராதனை முறையான ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படியே எமக்கு ஆராதனம் செய்ய வேண்டும். எனது சன்னதிக்க வந்து என்னை வணங்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரங்களை அருளப்போகிறேன். எனது சன்னதியில் வந்து விரதமிருப்போர் கன்னிகையை வேண்டுபவன் நல்ல கன்னிகையையும், சந்ததியை, வேண்டுவோர் நல்ல சந்ததியையும், தனத்தை விரும்புவோர் தனத்தையும், உடல் உபாதைகள் உள்ளோர் அவைகள் யாவும் நீங்கி நலமும் பெறுவர். என்னை வணங்குபவன் ஒருபோதும் வருத்தமடைய மாட்டான்.நீ உமது முன்னோர்களால் ஆளப்பட்ட பத்ரசக்ரம் என்ற இடத்தில் இருந்துகொண்டு என்னை அனுதினமும் வந்து வழிபடுவாயாக. முக்கியமாக சனிக்கிழமைகளில் நீ மட்டும் தனியாக வந்து என்னை வழிபடு" என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
எம்பெருமானின் உத்தரவுப்படியே மிகச் சிறந்த கலையம்சத்துடன் கூடிய ஆலையத்தை உருவாக்க அரசன் எண்ணினான். ஆனால் எம்பெருமானோ, எனக்கு தற்போது எளிமையான ஆளையத்தையே அமைப்பாயாக கலியுகத்தில் ஐயாயிரம் வருடங்களுக்குப்பின் பக்தர்கள் எனது கைங்கர்யத்தில் ஈடுபட்டு ஆலையத்தை விரிவுப்படுத்த உள்ளார்கள் அவர்களுக்கு புத்ர, பௌத்ராதிகளுடன், எல்லா நலன்களையும் அருள்புரிய உள்ளேன். உமது பத்ரசக்ரபட்டணத்தை நன்முறையில் சீர்படுத்தி அமைப்பாயாக என உத்தரவளித்தார்.
அதன்படியே ஞானவர்ம அரசனும் எம்பெருமானுக்கு மிக எளிய ஆலயத்தை அமைத்து ஸ்ரீவைகநஸர்களைக் கொண்டு மஹாசம்ப்ரோஷனத்தையும் நடத்தி அவர்களுக்கு ஸ்வர்ணங்களையும், ரத்னங்களையும் தானமாக வழங்கி அவர்களது ஆசியையும் பெற்றான். ஸ்ரீவைகாநஸ பகவத்சாஸ்திர முறைப்படி அனுதினமும் குறைவர திருவாராதனம் நடைபெறும் ஏற்பாடுகளைச் செய்தான்.
எம்பெருமானின் உத்தரவுப்படி பத்ரசக்ர பட்டிணத்தை சீரமைத்து அங்கு மாளிகை அமைத்து அனுதினமும் எம்பெருமானை வழிபட்டு வந்தான். சனிக்கிழமைகளில் தனியாக வந்து எம்பெருமானை வாங்கினான். இந்நாட்களில் எம்பெருமானே அரசனிடம் நேரில் காட்சியளித்து அவனது ராஜ்ய பரிபாலம் குறித்தும், பக்தர்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றும் விதமகையும், அருள்வாக்கு மலர்ந்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஞானவர்ம அரசனின் காலத்தில் ச்ருததேவன் என்பருக்கு கண்பார்வை கிடைத்ததும், பகுவிராஜனின் முடத்தன்மை நீங்கியதும், தேவதாசன் என்ற ஊமை குழந்தை பேசியதும், பிருதுகீர்த்தி, காந்திமதி தம்பதியருக்கு புத்ரபாக்கியம் ஏற்பட்டதும் எம்பெருமானின் பரம கருணையினாலேயே. எம்பெருமானின் நியமனப்படி ஒரு மண்டல காலம் அவர்கள் சன்னதியில் தங்கியிருந்து காவேரி நதியில் நீராடி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமானை வழிபட்டதாலேயே கைவல்யமாக தங்களது வரங்களைப் பெற்றனர் என பவிஷ்யோத்ரா புராணத்திலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்வாபரயுகம் நிறைவேறும் வரை உனது ( ஞானவர்ம அரசன்) சந்ததியினராலும், கலியுகத்தில் ஸ்ரீ வைகாநஸர்களால் முக்காலத்திலும் ஆராதிக்கப்பட்டு பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருளப் போகிறேன்" என்ற எம்பெருமானின் வாக்குப்படி தற்போதும் ஸ்ரீ வைகாநஸ ஆகம முறைப்படி ஆராதனமும் நடைபெற்று வருகிறது.
கலியுகத்தின் முர்ப்பகுதியில் வாழ்ந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மஹாஞானியான நாராயண தீர்த்தர் தமது தீராத வயிற்றுவலியால் அநேக ஷேத்திரங்களுக்குச் சென்று பாதயாத்திரையாக வரும்போது ஒரு சமயம் குணசீலஷேத்திரத்தில் தங்கி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமானை வணங்கி தமது வயிற்றுவளியை நீக்குமாறு பிராத்தித்தார். அன்று இரவு எம்பெருமான் கனவில் தோன்றி "உமது வயிற்றுவலி நீங்கப்பெருவீர், நீர் காலையில் எழுந்து எதைக் காண்கிறீரோ அதனைப்பின் தொடர்ந்து சென்றால் உமக்கு அபயம் அளிக்கிறேன்" என திருவாய் மலர்ந்தருளினார்.
அதன்படி நாராயணத்தீர்த்தர் வயிற்றுவலி நீங்கப்பெற்றவராக காலையில் எழுந்தவுடன் ஒரு வராஹத்தைக் (வெள்ளைப்பன்றி) கண்டார் அதனைப் பின் தொடர்ந்து சென்றார். அது காவிரியின் கரையோரமாக சென்று பூபதிராஜபுரம் என்ற ஊரை அடைந்து அங்கு அமைந்துள்ள ஒரு புற்றினுள் சென்று மறைந்தது. அந்தப் புற்றினுள் எம்பெருமான் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் காட்சியளித்தார். எம்பெருமானின் ஆஞ்யைப்படி அங்கு ஒரு ஆலையத்தை நிர்மாணித்தார். அந்த ஆலயத்தில் எம்பெருமானை பிரதிஷ்டை செய்து எம்பெருமானை கண்ணனாகவே பாவித்து பஜனைப் பாடல்களைப் பாடி வந்தார். கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற கிரந்தத்தையும் எழுதி அதனை அனைவரையும் தோத்திரம் செய்யச் செய்து பகவானின் கருணையைப் பெற வழிவகை செய்தார்.
வராஹம் நுழைந்ததால் அந்த ஊர் வரகூர் என அழைக்கப் படலாயிற்று. நாராயனதீர்த்தரும் அநேக நதிகளில் நீராடி தீர்த்த யாத்திரை செய்து கடைசியில் திருப்பூந்துருத்தியில் ஒரு மாமரத்தினடியில் நிஷ்டையில் ஆழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இவர் தமது தரங்க கீர்த்தனையான பாவவே ஹ்ருதயாரவந்தே என்ற ஸ்லோகத்தில்
முனிமானஸானு கூல முரளிலோல - வினயாதி
குணசீல வேத புரானாதி மூல
என்ற வரிகளில் க்னசீலப் பெருமானை முரளீ லோலனாக பாவித்து அனுபவித்ததை நாம் அறிய முடிகிறது. இவ்வாறாக ஸர்வ ஜனாபீஷ்டத்தையும் பூர்த்தி செய்து கொண்டு குனசீலஷேத்திரத்தில் நித்யவாஸம் செய்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமானின் பெரும் கருணையால் தங்கள் வேண்டுதல்களை கைவல்யமாகப் பெற்றோர்கள் கோடான கோடியாவர்.
அபயம் என்று தன்னை அண்டி வருபவர்களை குனசீலப் பெருமான் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர்களை அரவணைத்து அருள்போழிந்து ஆனந்தமயமான வாழ்வினை அருளுகின்றார். எவ்வாறு ஞானவர்ம அரசனின் காலத்தில் எம்பெருமானின் நியமனப்படி விரதமிருந்து ஒரு பகுவிராஜன் முடத்தன்மை நீங்கப் பெற்றானோ, ஒரு தேவதாசன் ஊமைத்தன்மை நீங்கப் பெற்றானோ, ஒரு ப்ருத்கீர்த்தி தம்பதியர் சத்புத்ரனைப் பெற்றானோ அதைப் போலவே இப்போதும் விரதமுறைகளை மேற்கொண்டு குனசீலப் பெருமானை வணங்கி நின்றால் அவர்கள் வேண்டும் பலன்களை எம்பெருமானின் பரம கருணையாலே கைவல்யமாக பெற்றுச் செல்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
தற்போது உள்ள இயந்திரமயமான உலகில் மன அமைதி என்பது கிடைத்தற்கரிய ஒன்றாகிவிட்ட நிலையில் அதனை அருளுவதர்காகவே எம்பெருமான் கலியுக தெய்வமாய் இங்கே காட்சியளிக்கிறார். தனது வலக்கையல் ஏந்தியுள்ள செங்கோலினால் தீராதவினைகளை விரட்டி சாஸ்வதமான சுகத்தை அருளுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஒரு மண்டலம் தங்கி (48 நாட்கள்) அனுதினமும் காவேரி நதியில் நீராடி எம்பெருமானுக்கு நடைபெறும் ஆறுகால பூஜைகளில் தவறாமல் கலந்து கொண்டு திருவர்ட்பிரஸாதங்ககளை உட்கொண்டு வந்தால் அவ்வ்ப்னைகள் யாவும் நீங்கி சுகம் பெறுகின்றனர்.
விசேஷமாக மதியம் நடைபெறும் உச்சிகால பூஜையிலும், இரவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையிலும் எம்பெருமானின் பாதோதக தீர்த்தம் எல்லோருடைய முகத்திலும் தெளிக்கப்படுகிறது. இதனால் சகல தோஷங்ககளும் நிவர்த்தியாகிறது.
மநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி வழிபட ஏதுவாய் மனநல மறுவாழ்வு மையம் ஒன்றும் திருக்கோயிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவருடன் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் தங்கி வழிபடும் வகையில் அனைத்து வாதிகளுடனும் கூடிய அறைகள் ஒதுக்கப்படுகிறது. மனநல மருத்துவ சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்திர முறைப்படியே அனுதினமும் எம்பெருமானுக்கு ஆறுகால பூஜைகள் விசேஷமாக நடைபெறுகிறது. திருமைலையில் திருவேங்கமுடையானுக்கு நடைபெறுவது போன்றே இங்கும் உற்சவங்கள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில் பதினோரு தினங்கள் ப்ரும்மோர்ச்சவமும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் தெப்போர்சவமும், ஆவணிமாதத்தில் திருப்பவித்ரோத்ஸவமும், ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி, வைகாசிவிசாகம், கர்த்திகைதீபம், விஜயதசமி ஆகிய உற்சவங்களும், மார்கழி மாதம் முழுவதும் உஷட்கால பூஜைகளும் உத்தராயண , தஷிணாயன புண்ணியகால விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரமும், பிரதி வார சனிக்கிழமைகளும் விசேஷ நாட்களாகும்.
இங்கு பிரார்த்தனையாக எம்பெருமானுக்கு வேண்டிக் கொண்டு அங்கபிரதஷணம், அடிபிரதஷணம், முடி காணிக்கை செலுத்துதல், திருமஞ்சனம், சந்தனக்காப்பு, புஷ்பங்கி, கருடசேவை முதலியவைகளை செய்கின்றனர். குலதெய்வமாக வழிபடுவோர் மாவிளக்கு ஏற்றுகின்றனர். புரட்டாசி மாதம் நடைபெறும் ப்ரும்மோற்சவத்தில் திருத்தேரின் பின்தொடர்ந்து தேரோடும் வீதியில் பக்தர்கள் அங்க பிரதஷணம் செய்வது வேறெங்கும் காணாத ஒரு பிரார்த்தனையாக இங்கு நிகழ்கிறது.
திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனைகளைச் செய்ய இயலாதோர் அந்த பிரார்த்தனைகளை இங்கு செலுத்தி நிறைவு செய்கின்றனர். ஆனால் குணசீலப் பெருமானுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனையை வேறெங்கும் செய்யக்கூடாது அதனை இங்கேயே செய்ய வேண்டும் என்ற கூற்று கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.
இங்கு பெருமாளுக்கு ஒரு சன்னதி மட்டுமே உள்ளது வேறு சன்னதிகள் கிடையாது. மூலவர் எம்பெருமான் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் சங்கு, சக்கரம், வரதஹஸ்தம், கடிஹஸ்தம், சதுர்புஜத்துடன், இலக்குமியை மார்பில் தாங்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தனது வலக்கையில் செங்கோல் ஏந்தி இருப்பதால் செய்வினை கோளாறுகளை அகற்றுவதாக ஐதீகம். உற்சவர் ஸ்ரீனிவாசர் என்ற திருநாமத்துடனும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் ஸேவை சாதிக்கிறார். த்வாரபாலகர்கள், கருடன், விஷ்வக்ஸேனர், த்வஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியவை வைகாநஸ ஆகம முறைப்படியாக திருகோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அமைந்துள்ள தீபஸ்தம்பத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். ஷேத்திரபாலகர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் செய் ஆஞ்சநேயருக்கு, எம்பெருமானுக்கு வேண்டுதல்களைச் செய்து முடிப்பவர்கள் கடைசியாக ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இத்துருகோயிலின் நிர்வாகமானது பரம்பரை வழி வழி வரும் அர்ச்சகர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நித்ய பூஜைகளையும் உற்சவங்களையும் சிறப்பாக இவர்கள் நடத்தி வருவதைப் போன்றே திருப்பணிகளையும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர்.
1976 ம் ஆண்டு பரம்பரை டிரஸ்டிகள் குழுவிற்கு தலைமை வகித்த காலம் சென்ற லு. ர. ரெங்கனாத அய்யங்கார் அவர்களின் பெரும் முயற்சியால் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு நூதன ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு, பிரகாரங்கள் புனரமைக்கப்பட்டு, அலுவலக கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு, சித்தவிடுதி, முடி செலுத்தும் இடம், யாத்திரிகர்கள் தாங்கும் விடுதி, தெப்பக்குளம் சீரமைப்பு முதலிய பற்பல திருப்பணிகள் நிறைவு பெற்று மஹாசம்ப்ரோஷனமானது நிகழ்த்தப்பட்டது.
தற்போது பரம்பரை டிரஸ்டிகள் குழுவால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு மேலும் பல திருப்பணிகள் செய்து ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணி, மிகவும் தாழ்வாக இருந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகியவற்றை உன்னதமாக உயர்த்த முடிவு செய்தனர்.
கலியுகத்தில் ஐயாயிரம் வருடங்களுக்குப் பின்பே எனது சன்னதி விரிவடையும் எனது கைங்கர்யத்தில் பக்தர்கள் ஈடுபடப் போகிறார்கள் என்ற எம்பெருமானின் ஆஞ்ஞையை சிரமேற்கொண்டு, தற்போது நடைபெட்ட்று வருவது 5104 வது கலியுக வருடம் ஆகையால் எம்பெருமானிடம் உத்தரவு பெற்று சன்னதியை உன்னதமாக்க டிரஸ்டிகள் குழு முடிவு செய்தது.
கர்பக்கிரஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகியவை உன்னதப்படுத்த ஏதுவாக, மூலவர் எம்பெருமானை பாலாலய சன்னதியில் எழுந்தருளச் செய்ய திருக்கோயில் உள்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய சன்னதி நிர்மாணிக்கப்பட்டது.
ஸ்ரீ வைகாநஸ ஆகம முறைப்படியான யாகசால பூஜைகள் செய்யப்பட்டு 04. 11 . 2001 அன்று மூலவர் எம்பெருமானை பாலாலய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தாழ்வாக இருந்த பழைய கர்பக்கிரஹம் , அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகியன முழுவதுமாக அகற்றப்பட்டு அஸ்திவாரத்தில் இருந்து நூதன ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த நூதன ஆலயமானது முழுவதும் கருங்கல்லினால் சிற்ப சாஸ்திர முறைப்படியும், வைகாநஸ ஆகம முறைப்படியும் கலையம்சத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. கர்பக்கிரஹம் அர்த்தமண்டபத்தின் வெளிச்சுவர்களில் பாலகிருஷ்ணன், நரஸிம்மன், வராஹன், யஞ்யநாராயணன், விஷ்ணுதுர்க்கை ஆகிய விக்ரஹங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டன . மஹாமண்டத்தின் வேதத்தூனில் ருக், யஜுர், ஸாம, அதர்வண வேத மூர்த்திகளின் உருவமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேல்பகுதி ஷட்கோணமாக அமைக்கப்பட்டு அதன் மேல்பகுதி சந்தணமரத்தால் விதானம் அமைக்கப்பட்டது. ஏகதளமாக இருந்த விமானம் த்ரிதளவிமானமாக உயர்த்தப்பட்டு ஸ்வர்ணகலசம் பிரதஷ்டை செய்யப்பட்டது. அர்த்த மண்டப கதவு நிலைப்படிக்கு வெள்ளிக்கவசமும், மஹா மண்டப கதவு நிலைப்படிக்கு பித்தளை கவசமும் அனுவிக்கப்பட்டன. கருடன் சன்னதி, த்வஜஸ்தம்பபீடம், பலிபீடம் ஆகியன கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்டன. ஸ்வர்ணமயமான த்வஜஸ்தம்பமும், தீபஸ்தம்பமும் அமைக்கப்பட்டன.
ஸ்ரீ விகநஸாசார்யருக்கு கருங்கல்லினால் சிற்பசாஸ்திரப்படி தனி சன்னதியும் நிர்மாணிக்கப்பட்டது. பிரகாரங்கள் முழுவதும் அதிவிசாலமாகவும், அழகாகவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு தூண்கள் அணிவொட்டிக்கால் மண்டபத் தூண்களாக அலங்கரிக்கப்பட்டன. அங்கபிரதஷணம் பக்தர்கள் செய்ய ஏதுவாய் தளவரிசைக்கு கிரானைட் பொருத்தப்பட்டது. எம்பெருமானுக்கு நூதனமாய் கண்ணாடிப் பள்ளியறையும் வாஹனமண்டபமும் அமைக்கப்பட்டன. மணிக்கதவு, பள்ளியறை முகப்பு, வாகன மண்டப நிலை ஆகியன மரவேலைப்பாடுகள் மிகுந்ததாகவும் அமைக்கப்பட்டன. திருமடைப்பள்ளி, யாகசாலை ஆகியன புனரமைக்கப்பட்டன,
ஏகாந்தமண்டபம் ஒன்றும் புதிததாக நிர்மாணிக்கப்பட்டது. கோயிலின் முன்பகுதியில் தாலாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. குளங்கள் தூர்வாரப்பட்டு, விமான, ராஜகோபுரங்கள் வர்ணகலாபங்கள் செய்யப்பட்டு குணசீலப் பெருமானின் ஆலயத் திருப்பணியானது அவரது நியமனப்படி மகோன்னதமாக நடைப்பெற்று ஞாகனவர்ம அரசன் அன்று ஆயிரமாயிரம் குடங்கள் பால்கொண்டு புற்றைக்கரைத்து எம்பெருமானுக்கு கோயில் கட்டியதைப் போல் தற்போது நாமும் அந்த காட்சியைக் காண எம்பெருமான் சங்கல்பித்ததைப்போல் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பாதுக ஸேவாஸமிதியால் 4 . 7 . 2004 அன்று திருச்சி உறையூரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக 10 ,008 குடங்கள் பால் கொண்டு வந்து எம்பெருமானுக்கு பாலாலய சன்னதியில் திருமஞ்சனம் செய்வித்தனர். எம்பெருமானின் திருவுள்ளப்படி 05 . 07 . 2004 அன்று மூலவர் எம்பெருமானை நூதன கர்ப்பக்கிரஹத்தில் வைகாநஸ ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 27 . 08 . 2004 அன்று விமான ராஜகோபுரங்கள் மஹாசம்ப்ரோஷனம் இனிதே நடைபெற்றது.